அமைச்சர் இல்லாததால் விளையாட்டு துறை சுணக்கம்

கர்நாடக விளையாட்டு துறைக்கு மீண்டும் அமைச்சர் கிடைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்தவர் நாகேந்திரா. இவர் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தார். அந்தத் துறையில் நடந்த முறைகேடு தொடர்பாக அதிகாரி ஒருவர் தற்கொலை செய்ததால், தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால், அவர் வசம் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, முதல்வர் சித்தராமையா கட்டுப்பாட்டில் வந்தது. விளையாட்டுத்துறை தனது கட்டுப்பாட்டில் வந்த புதிதில் அடிக்கடி அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி, விளையாட்டு துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தார்.

கடந்த சில மாதங்களாக விளையாட்டு துறை அதிகாரிகளுடன், அவர் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. ஏனென்றால் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் முதல்வர் வசம் உள்ளன. அந்த துறைகளையும் அவர் கண்காணிக்க வேண்டியுள்ளது.

விளையாட்டு துறை மீது அவரால் முழு கவனம் செலுத்த முடியவில்லை. இதனால், விளையாட்டு துறையில் முன்னேற்ற பணிகள் எதுவும் நடக்கவில்லை. துறை தொடர்பான கூட்டங்களை, உயர் மட்ட அதிகாரிகள் மட்டுமே நடத்தி கொள்கின்றனர். என்ன நடக்கிறது என்றே, இரண்டாம் கட்ட அதிகாரிகளுக்கு தெரியவில்லை.

விளையாட்டு வீரர்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து, முதல்வரிடம் நேரடியாக எடுத்து சொல்லவும் வாய்ப்பு குறைவாக உள்ளது. அமைச்சர் இருந்தால் கூட அவரது கவனத்திற்கு கொண்டு செல்லலாம். தங்கள் பிரச்னையை யாரிடம் சொல்வது என்று அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

விளையாட்டு துறைக்கு மீண்டும் அமைச்சரை நியமித்தால் மட்டுமே எல்லாம் சரியாக இருக்கும் என்பது பலரது எண்ணமாக உள்ளது.

அமைச்சர்கள் சிலரும் விளையாட்டு துறையை பெற முயற்சி செய்தனர். ஆனால் யாருக்கும் தராமல், தன்வசமே முதல்வர் வைத்துள்ளார்.


ஒன்று, யாருக்காவது விளையாட்டு துறையை ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த துறை மீது முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே விளையாட்டு துறை மீண்டும் புத்துயிர் பெறும்
--- நமது நிருபர் - -
.

Advertisement