வாடகை தாய் 2வது குழந்தை தடை சட்டம் மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

பெங்களூரு: வாடகைத் தாய் மூலம் இரண்டாவது குழந்தை பெறுவதற்கு தடை விதித்து, மத்திய அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்ய கோரிய தம்பதியின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஆந்திராவை சேர்ந்த தம்பதி, பெங்களூரில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, 2016ல் திருமணம் நடந்தது. 2017ல் ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின், 2019ல் மீண்டும் அப்பெண் கர்ப்பமானார். ஆனால், சில பிரச்னையால் அவரது கரு கலைந்தது. 'இனி அவரால் குழந்தை பெற இயலாது' என்று டாக்டர்கள் கூறினர்.

இதையடுத்து, வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தனர். இதற்காக, அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்து, வாடகை தாய்க்கு பணமும் கொடுத்து விட்டனர்.

இதற்கிடையில், 'வாடகைத் தாய் ஒழுங்கு முறை - 2021' சட்டம், 2022 ஜனவரி 25ல் அமலுக்கு வந்தது. இதன்படி, வாடகைத்தாய் மூலம் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. அதிர்ச்சியடைந்த தம்பதி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவில், 'வாடகைத்தாய் மூலம் இரண்டாவது குழந்தை பெற அனைத்து தகுதிகளும் இருந்தது. இதற்கான மருத்துவ சிகிச்சை முறை துவங்கியபோது, 'வாடகைத்தாய் ஒழுங்கு முறை - 2021' சட்டம் அமலானது.

இச்சட்டத்தால் எங்களுக்கு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற அனுமதி இல்லை என்று கூறிவிட்டனர். எனவே, இச்சட்டத்தில் உள்ள 4(3) (சி) (2) பிரிவை ரத்து செய்து, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற அனுமதி அளிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தனர்.

இம்மனு, நேற்று முன்தினம் நீதிபதி தேவதாஸ் முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 'இதற்கு விளக்கும் அளிக்கும்படி, மத்திய, மாநில குடும்ப நல அமைச்சகம், மாநில வாடகைத்தாய் சட்டம், பெங்களூரு மாவட்ட மருத்துவ வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்' என்று கூறி, விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

Advertisement