அரிசி சேமிப்பு திட்டத்தில் 1,000 பேரிடம் பண மோசடி செய்தவர்கள் தலைமறைவு

வேலுார்: வேலுார் மாவட்டம், குடியாத்தம் டவுனை சேர்ந்தவர் வரதராஜ், 65. ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக கண்டக்டர். இவரது மகன் பிரபு, 43. இருவரும், 'ஸ்ரீயோகாஷ்னா டிரேடர்ஸ்' என்ற கடையை நடத்தி வந்தனர். கடந்த, 8 ஆண்டுகளாக, மாத ஏல சீட்டு, தீபாவளி சீட்டு, பொங்கல் அரிசி சேமிப்பு திட்டம் என பல திட்டங்களில் சீட்டு நடத்தி வந்தனர்.


பொங்கல் அரிசி சிறு சேமிப்பு திட்டம் மூலம், மாதம், 1,100 ரூபாய் என, 12 மாதத்திற்கு, 13,200 செலுத்தினால், 13வது மாதத்தில், 26,400 ரூபாய்க்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்படும் என, 1,000 பேரிடம் பணம் வசூலித்து வந்தனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பணம் கட்டியவர்கள், அவரது மளிகை கடைக்கு சென்று பொருட்களை கேட்டபோது, இன்னும் ஓரிரு நாட்களில் தருவதாக கூறி வந்தனர். இந்நிலையில் கடந்த, 4 நாட்களாக கடை மூடியிருந்ததால், அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீடும் பூட்டப்பட்ட நிலையில், அவர்கள் குடும்பத்துடன் தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் படி, குடியாத்தம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement