படிப்பு, விளையாட்டில் பிரகாசித்த 'ஆப் ஸ்பின்னர்' இ.ஏ.எஸ்.பிரசன்னா
படிப்புக்காக விளையாட்டை விட்டவர், படிப்பை முடித்த பின், சாதித்தவர் இ.ஏ.எஸ்.பிரசன்னா எனும் ஈரப்பள்ளி அனந்தராவ் சீனிவாஸ் பிரசன்னா, 84. இவர், பெங்களூரில் 1940ல் பிறந்தார்.
கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்ததால், 1961ல் சென்னையின் நேரு மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 'டெஸ்ட்' போட்டி மூலம் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
ஆப் ஸ்பின்னரான இவர், முதல் இன்னிங்சில் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும், ஒன்பது ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதில் இரண்டு ஓவர்களில் ஒரு ரன் கூட எடுக்காதபடி பந்து வீசினார். இரண்டாவது இன்னிங்சில் 11 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து, ஒரு விக்கெட் வீழ்த்தினார். சிறப்பாக பந்து வீசியதால், அனைவராலும் கவனிக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து, வெஸ்ட் இண்டீசில் நடந்த டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்தார். ஆனால் அவர் சரியாக விளையாடாததால், வருத்தம் அடைந்தார். நாட்டுக்கு திரும்பியதும், விளையாட்டை விட்டு, படிக்க சென்றார். ஐந்து ஆண்டுகளில் பொறியியல் படிப்பை முடித்த பின், மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார்.
அப்போது 1967ல் இந்திய அணியின் கேப்டனாக இருந்த மறைந்த பட்டோடி, பிரசன்னாவுக்கு ஊக்கம் அளித்தார். இதன் மூலம் எந்த மைதானமாக இருந்தாலும், இவர் சொல்படி பந்து கேட்கும் அளவுக்கு பயிற்சி பெற்றார். இதனால் பல விக்கெட்களையும் வீழ்த்தினார்.
ஸ்பின் ஜாம்பவான்கள் வெங்கட்ராகவன், சந்திரசேகர், பிசன் சிங் பேடி ஆகியோர் இருந்தும், பிரசன்னாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இதை நன்றாக பயன்படுத்தி கொண்டார். 1970களில் இவர்கள் நால்வரும் அணியில் இடம் பிடித்து விளையாடினர். 1978ல் பாகிஸ்தானுக்கு இந்திய அணி விளையாட சென்றது.
இதில், முதல் இன்னிங்சில் பிரசன்னா, 25 ஓவர்களில் 94 ரன்கள் கொடுத்து, விக்கெட் எடுக்கவில்லை. இரண்டாவது இன்னிங்சில் பந்து வீசவில்லை. அங்கிருந்து வந்த பின், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரசன்னா அறிவித்தார்.
அதுமட்டுமின்றி, உள்ளூர் போட்டிகளில் கர்நாடகா அணிக்கு தலைமை ஏற்று, இரண்டு முறை ரஞ்சி கோப்பை பெற்றுத்தந்தார். இதன் மூலம் தொடர்ந்து 15 ஆண்டுகள் ரஞ்சி போட்டி கோப்பையை பெற்று வந்த மும்பை அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பி.சி.சி.ஐ., எனும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக, 2007ல் துவங்கிய ரிபெல் கிரிக்கெட் லீக் போட்டிகளுக்கு நடுவராக செயல்பட்டார். பின், 2009ல் அதிலிருந்து வெளியேறினார். இந்த தகவலை, தனது 'ஒன் மோர் ஓவர்' என்ற சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
இவரை கவுரவிக்கும் வகையில், பெங்களூரு, தொம்மலுார் மூன்றாவது குறுக்கு சாலைக்கு, 'இ.ஏ.எஸ்., பிரசன்னா சாலை' என்று அரசு பெயர் வைத்துள்ளது.
இவர், 16 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில், 49 கிரிக்கெட் போட்டிகளில், 86 இன்னிங்ஸ் விளையாடி உள்ளார். இதில், 189 விக்கெட்கள் வீழ்த்தி, 602 ஓவர்களில் ஒரு ரன் கூட கொடுக்கவில்லை. ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் வீதம், 10 முறை ஐந்து வீக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.
� டெஸ்ட் போட்டியில் பந்து வீசிய பிரசன்னா. � தொம்மலுார் மூன்றாவது குறுக்கு சாலைக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை - கோப்பு படம்.
- நமது நிருபர் -