டேக்வாண்டோவில் அசத்தும் குடகு மாணவி

கர்நாடகாவின் மலைநாடு மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது குடகு. இந்த மாவட்டம், ஹாக்கி விளையாட்டிற்கு பெயர் போனது. இந்திய ஹாக்கி அணிக்கும் குடகில் இருந்து ஏராளமானோர் தேர்வாகி அசத்தி உள்ளனர். இப்படிப்பட்ட ஊரில் இருந்து 14 வயது மாணவி, டேக்வாண்டோ போட்டிகளில் அசத்தி வருகிறார்.

குடகின் மடிகேரி அருகே மூர்நாடு கிராமத்தை சேர்ந்தவர் சங்கப்பா. இவரது மனைவி நமீதா. இவர்களின் மகள் ஜஸ்மிதா சதா, 14. தற்காப்பு கலையை கற்றுக் கொடுக்கும் நோக்கில் 8 வயதில் ஜஸ்மிதாவை அவரது பெற்றோர் டேக்வாண்டோ வகுப்பில் சேர்த்து விட்டனர்.

கங்காதர், அனில் ஆகியோரிடம் சிறப்பாக பயிற்சி எடுத்து, மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் டில்லி ராஜ் காட்டில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு வளாகத்தில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவினருக்கான 27வது தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில் ஸ்பாரிங் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும், தற்காப்பு பிரிவில் வெண்கல பதக்கமும் வென்று அசத்தினார்.

இதுகுறித்து, ஜஸ்மிதா சதா கூறியதாவது:

தற்காப்பு கலையை பெண்கள் கற்றுக்கொள்வது எப்போதும் முக்கியமானது. ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து மீண்டு வருவதற்கு உதவும். இதை கற்றுக்கொள்வதற்காக, எனது பெற்றோர் என்னை டேக்வாண்டோ பயிற்சிக்கு சேர்த்து விட்டனர்.


இப்போது டேக்வாண்டோவில் தங்கம், வெண்கல பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா சார்பாக டேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பது எனது ஆசை. இவ்வாறு அவர் கூறினார்

--- நமது நிருபர் --.

Advertisement