'வீல் சேர் டென்னிஸ்' சாதிக்கும் மாற்று திறனாளி

மங்களூரை சேர்ந்தவர் பிரத்திமா ராவ், 40. மூன்று வயது இருக்கும் போதே, போலியோ நோயால் பாதிகப்பட்டார். இதில் அவரது வலது கால் முடங்கியது.இதனால் அவர் வீல் சேரின் உதவியை நாடினார். கால்கள் முடங்கி போனாலும், மனம் முடங்கி போகவில்லை.

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற வெறி மனதிற்குள் இருந்து உள்ளது. இதன் விளைவாக விளையாட்டில் ஆர்வம் செலுத்த துவங்கினார். கால் முடங்கி போனதால், எப்படி விளையாடுவது என சிந்தித்து உள்ளார்.

ஓடி, ஆடிதான் விளையாட முடியாது; உட்கார்ந்தே விளையாடலாம் என யோசனை செய்து உள்ளார். சிறுவயதிலே வீல் சேரில் அமர்ந்து கொண்டு, டென்னிஸ் விளையாட துவங்கி விட்டார். ஒரு நாளைக்கு 4 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து கடினமாக பயிற்சிகளில் ஈடுபட்டார்.

இதன் விளைவாக மாநில அளவிலான வீல் சேர் போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வாங்கி குவிக்க துவங்கினார். 2015ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான வீல் சேர் டென்னிஸ் போட்டியில், கர்நாடகா சார்பில் பங்கு பெற்று வெற்றி பெற்றார். பின், தாய்லாந்து கப், மலேஷியா கப் போன்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, வெற்றி அடைந்தார்.

அந்த சமயத்தில், கர்நாடகா டென்னிஸ் அமைப்பின் மூத்த பயிற்சியாளராக இருந்த ரமேஷ், தானாக முன்வந்து இவருக்கு இலவசமாக பயிற்சி அளித்தார். விளையாட்டில் பிரபலமாக இருந்தாலும், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக உதவித்தொகையை பெற்று வருகிறார்.

வரும் பிப்ரவரியில் நடக்க இருக்கும், வீல் சேர் டென்னிஸ் போட்டிக்கான, உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்றில் இந்திய அணி சார்பில் பங்கு பெற உள்ளார்.


'மற்றவர்கள் உன் மீது வைக்கும் நம்பிக்கையை விட, நீ உன் மீது வைக்கும் தன்னம்பிக்கையே சிறந்தது' என்பதை இவரது வாழ்க்கை உணர்த்துகிறது
- நமது நிருபர் -
.

Advertisement