தார்வாடில் 'ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ்' விளையாட்டு வீரர்கள் உற்சாகம்
தார்வாடில் விளையாட்டு வீரர்களை உருவாக்க வசதியாக, 'ஸ்போர்டஸ் காம்ப்ளக்ஸ்' கட்டப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளும் இருப்பதால் விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதிக ஆர்வம்
தார்வாட் மாவட்டத்தில், பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட இளம் தலைமுறையினர் ஏராளம்.
இவர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. குறிப்பாக அனைத்து வசதிகளும் அடங்கிய, 'ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ்' இல்லையே என, விளையாட்டு வீரர்கள் ஏங்கினர்.
'விளையாட்டு வீரர்களுக்காக, 'ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் கட்ட வேண்டும்' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லத், அதிக ஆர்வம் காட்டினார். இவரது வேண்டுகோளுக்கு இணங்கி, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, தார்வாடில் 'ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ்' கட்டுவதற்கு, 2018ல் அடிக்கல் நாட்டினார்.
மாவட்ட விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுடன் கலந்தாலோசித்து, அந்தந்த விளையாட்டுகளுக்கு தகுந்தபடி, 'ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ்' கட்டப்பட்டது. அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதியுதவியுடன், 35 கோடி ரூபாய் செலவிட்டு, 1.6 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. டில்லியின் ஐ.ஐ.டி., மற்றும் பிரபலமான ஸ்கூல் ஆப் பிளானிங் அண்ட் ஆர்க்கிடெக்ட் தொழில்நுட்ப நிறுவனம், திட்டம் வகுத்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச தரம் வாய்ந்த நீச்சல் குளம், உள் விளையாட்டு அரங்கம், கேலரி, விளையாட்டு வீரர்களுக்கான தனி அறைகள் உட்பட, அனைத்து வசதிகளும் இங்குள்ளன. மூன்று மாடிகள் உள்ளன.
கூடுதல் வசதிகள்
தரை தளத்தில் கார், பைக்குகளின் தனி பார்க்கிங் வசதி, உணவகம், சிறார்கள், பெரியவர்களுக்கு தனித்தனி நீச்சல் குளம், கபடி விளையாட்டு அரங்கம், பேட்மின்டன் கோர்ட், ஜூடோ அரங்கம், ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி ஜிம் வசதி உள்ளன.
விளையாட்டு பயிற்சியாளர்கள், டாக்டர்கள் அறை என, பல்வேறு வசதிகளும் உள்ளன. ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ், எப்போது திறக்கப்படும் என, விளையாட்டு வீரர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அவர்களின் பல நாள் கனவு நிறைவேறியுள்ளது. இன்னும் சில நாட்களில் திறந்து வைக்கப்படுகிறது.
ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ், தார்வாடுக்கு மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்டங்களின் விளையாட்டு வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது உறுதி
- நமது நிருபர் -
.