குடகு மாவட்டத்துக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் அர்ஜுன் ஹாலப்பா
இந்திய ஹாக்கி அணியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் அர்ஜுன் ஹாலப்பா, 44. கடந்த 1980ல் குடகு மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை பி.கே.ஹாலப்பா, கிளப் அளவிலான முன்னாள் விளையாட்டு வீரர். ஏழ்மையான குடும்பத்தில் அர்ஜுன் ஹாலப்பா பிறந்த போதும், சிறு வயதில் இருந்தே ஹாக்கி விளையாட்டில் ஆர்வமாக இருந்தார்.
பள்ளி அளவில் நடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி, பலமுறை தன் பள்ளி வெற்றி பெற காரணமாக இருந்தார். 1999ல் தேசிய அளவிலான சீனியர் அணியில் இடம் பிடித்தார். அதே ஆண்டில், ஐரோப்பாவில் நடந்த போட்டிக்கு, சர்வதேச அளவிலான ஜூனியர் பிரிவில் இடம் பிடித்தார். 2000ம் ஆண்டு ஜூனியர் ஆசியா கோப்பையில் எட்டு கோல்கள் அடித்து, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.
கடந்த 2001ல் எகிப்தில் நடந்த சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்று, அன்று முதல் சிறப்பாக விளையாடினார். 2001ல் கோலாலம்பூரில் நடந்த சாம்பியன்ஸ் சேலஞ்ச் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது. 2004 ஒலிம்பிக்கிலும் இந்திய அணியில் இடம் பிடித்தார்.
அதுபோன்று, 2010 காமன்வெல்த் போட்டியிலும் இடம் பிடித்தபோது, இந்திய அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது.
கடந்த 2011ல் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக விளையாடினார்.
இதன் மூலம், குடகில் இருந்து இந்திய அணி கேப்டன்களாக விளையாடிய எம்.பி.கணேஷ், பி.பி.கோவிந்த், எம்.எம்.சோமையா, பி.பி.சுப்பிரமணி, ஏ.பி.சுப்பையாவை தொடர்ந்து, இவரும் கேப்டனாகி அம்மாவட்டத்துக்கு பெருமை சேர்த்தார். 2012ல் ஹாக்கி விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்
- நமது நிருபர் -
.