மூதாட்டியிடம் ரூ.44 ஆயிரம் வழிப்பறி
விருத்தாசலம்,: வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த மூதாட்டியிடம் 44 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
மங்கலம்பேட்டை அடுத்த கோ.பவழங்குடியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி சேதுமணி, 56. வெளிநாட்டில் உள்ள மகன் ஹரிகிருஷ்ணன், சேதுமணி வங்கி கணக்கிற்கு ரூ. 43,600 பணம் அனுப்பியிருந்தார்.
விருத்தாசலம் தெற்கு வீதியில் உள்ள கனரா வங்கியில் இருந்து நேற்று காலை அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, உடல்நலக்குறைவு காரணமாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு நடந்து சென்றார்.
மருத்துவமனை சாலையில் சென்றபோது, பைக்கில் எதிரே மோதுவது போல் வந்த மர்ம நபர், சேதுமணியின் பணப்பையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தார்.
தகவலறிந்த விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, புருஷோத்தமன் உள்ளிட்ட போலீசார் விசாரித்து வருகின்றனர்.