கனகசபையில் 4 நாட்கள் தரிசனத்திற்கு சிக்கல்: பாதுகாப்பு கேட்டு தீட்சிதர்கள் மனு
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் தரிசன விழாவில், 4 நாட்கள் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபடுவதில் நடைமுறை சிக்கல் உள்ளதால், பாதுகாப்பு வழங்க வேண்டும் என, கலெக்டர் மற்றும் எஸ்.பி., யிடம் தீட்சிதர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசன விழா நடைபெறும்போது, பக்தர்கள் கனகசபையில் ஏறி வழிபட அனுமதிக்க வேண்டும் என, சிதம்பரத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், அறநிலையத்துறை மற்றும் காவல் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தரிசன விழாவின்போது, பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபட நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகவும் பாதுகாப்பு அளிக்க கோரியும், கலெக்டர் மற்றும் எஸ்.பி.,க்கு, தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேச தீட்சிதர் மனு அனுப்பியுள்ளார்.
அதில், நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா துவங்கி நடந்து வருகிறது. 11ம் தேதி முதல் 14 வரை, கோவில் பாரம்பரிய பூஜைகள், மத ரீதியான நடவடிக்கைகள், கனக சபையில் இடையூறு இல்லாமல் நடைபெற பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
கனகசபையில் குறுகிய இடமே உள்ளதால் விழாக்காலங்களில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். சித் சபையில் உள்ள நடராஜர் சுவாமி, தேரோட்டம் மற்றும் தரிசன தினமான 12, 13 ஆகிய இரு நாட்கள் வெளியில் வந்து விடுவதாலும், இந்த இரு தினங்கள் கனகசபையில் ஏரி தரிசனம் செய்ய இயலாது. 14ம் தேதி நடராஜருக்கு பாரம்பரிய பூஜை நடைபெறும். எனவே, 11ம் தேதி முதல் 14 வரை கனகசபையில் பக்தர்களை அனுமதிக்க முடியாத நிலை ஏற்படும்.
இந்த 4 நாட்களில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என தனி நபர் கேட்பதும், அதற்கு அறநிலையத்துறை அனுமதி வழங்க சொல்வதும், ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.