இடைத்தேர்தலால் வணிகர்கள் பாதிப்பு வணிகர் சங்க பேரமைப்பு விக்கிரமராஜா கருத்து

திண்டிவனம்: தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு முழுவதும் சிதறி கிடக்கின்ற வியாபாரிகளை ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதே பேரமைப்பின் நோக்கமாகும். பேரமைப்பின் 42வது மாநில மாநாடு மதுராந்தகத்தில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் வணிகம் பாதிக்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. சாமானிய வணிகர்களை பாதுகாப்பதற்கு, மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

வாடகைக்கு கடை வைத்திருப்பவர்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மாற்றாவிட்டால் , தென்மண்டல அமைப்புகளுடன் இணைந்து டில்லியில் மாபெரும் போராட்டம் நடத்த தீர்மானத்திருக்கிறோம் என்றார்.

ஈரோடு இடைத்தேர்தல் குறித்து அவர் கூறும் போது, '' எங்களை பொறுத்த வரை தமிழ்நாட்டில் இடைத்தேர்தலே நடத்தக்கூடாது . தேர்தல் அறிவித்த உடன் அங்கு வணிகம் முடங்கிவிட்டது. அரசியல் கட்சியினர் பணம் எடுத்து சென்றால் பிடித்ததாக சரித்திரம் இல்லை. சாமானிய வணிகர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து, எங்கள் அமைப்பின் ஆட்சிமன்ற குழு கூடி முடிவு எடுத்து அறிவிக்கும்' என்றார்.

Advertisement