டி.ஆர்.ஓ., அலுவலகம் முற்றுகை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் வருவாய் ஆய்வாளர்கள், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் உட்பட 40 பேரை இடமாற்றம் செய்து, மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவில், பெண் வருவாய் ஆய்வாளர்கள், மாற்றுத்திறனாளிகளை அவர்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து சுமார் 50 கி.மீ., துாரம் உள்ள இடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டி.ஆர்.ஓ.,வை கண்டித்தும் நேற்று மாலை 5.00 மணிக்கு விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முதல் தளத்தில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அறையை முற்றுகையிட்டனர்.
அரை மணி நேரம் நீடித்த போராட்டத்தை தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாததால், சங்க நிர்வாகிகள் இன்று காலை 11.00 மணிக்கு, விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.