கொலை செய்து புதைக்கப்பட்டவரின் உடலை உறவினர்களே தோண்டி கண்டுபிடித்தனர் போலீசாரை அலைக்கழித்த புது மாப்பிள்ளை

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மூன்றரை மாதங்களுக்கு முன்பு அடித்து கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை, விவசாய நிலத்தில் இருந்து உறவினர்களே தோண்டி எடுத்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சேமங்கலத்தை சேர்ந்தவர் முருகன் மகன் முத்துகுமரன், 27; விவசாயி. இவர் கடந்த செப்டம்பர் 19ம் தேதியிலிருந்து மாயமானார்.

புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்தனர் விசாரணையில், முத்துகுமரனின் வங்கிக் கணக்கில் இருந்த 8 லட்சம் பணத்தை, தமிழரசன் தனது பெயருக்கு மாற்றி அபகரித்துக் கொண்டார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் தமிழரசன், முத்துகுமரனை அடித்து கொலை செய்து, உடலை புதைத்தது தெரியவந்தது.

கடந்த 31ம் தேதி இரவு தமிழரசனை போலீசார் கைது செய்து கடலுார் சிறையில் அடைத்தனர்.

மலட்டாற்றில் தமிழரசன் அடையாளம் காட்டிய இடத்தில் போலீசார் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கடந்த டிசம்பர் 31ம் தேதி மற்றும் ஜனவரி 1ம் தேதி ஆகிய இரு நாட்கள் தோண்டியும் முத்துக்குமரன் உடல் கிடைக்கவில்லை.

நேற்று முன்தினம் மூன்றாவது முறையாக தோண்டி பார்த்தும் உடல் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் உடலை கண்டுபிடித்து தரக்கோரி நேற்று முன்தினம் மதியம் அரசூர் கூட்ரோடு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை முத்துகுமரனின் உறவினர்கள், தமிழரசன் காட்டிய இடத்திலிருந்து 50 மீட்டர் துாரத்தில் உள்ள அவரது நிலத்தில் ஹிட்டாட்சி இயந்திரம் மூலம் தோண்டினர்.

அப்போது, 5 அடி ஆழத்தில் மண்டை ஓடு, அழுகிய நிலையில் உடலின் சில பாகங்கள் மற்றும் ஆடைகள் கண்டெடுக்கப்பட்டன. போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

புது மாப்பிள்ளை



நண்பரை கொலை செய்த தமிழரசனுக்கு திருமணமாகி 2 மாதங்களே ஆகிறது. தமிழரசனிடம் விசாரணையை துவக்கியது முதல் கடைசி வரை உடலை இங்கு தான் புதைத்தேன். வேறு எங்கும் புதைக்கவில்லை என போலீசாரிடம் கூறி வந்தார். மேலும், தமிழரசன் வாக்குமூலத்தில், தனது மோட்டர் கொட்டகைக்கு முத்துக்குமரனை வரவழைத்து அடித்து கொலை செய்ததாக கூறியிருந்தார். ஆனால் மோட்டார் கொட்டைகையில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் உள்ள விவசாய நிலத்தில், 5 அடி ஆழத்தில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதனால் கொலையை தமிழரசன் ஒரே ஆளாக செய்திருக்க முடியாது. என சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement