காரைக்கால், தமிழக மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை
காரைக்கால்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழகம் மற்றும் காரைக்காலை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
காரைக்கால், கீழகாசாக்குடியை சேர்ந்தவர் செல்வமணி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 7ம் தேதி அதே பகுதியை சேர்ந்த அன்பழகன், நிகாஷ், பாண்டியன், செல்வகுமார்; மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கலை மணி, செல்வக்குமார், தங்கதுரை, சுமித், ரமேஷ்; நாகப்பட்டினத்தை சேர்ந்த ராஜசேகர் ஆகிய 10 பேர் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரைக்கு தென்கிழக்கே 35 நாட்டிகல் துாரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்தனர்.
மேலும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி துப்பாக்கி முனையில், 10 மீனவர்களையும் கைது செய்து, விசைப்படகு மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். மீனவர்களை இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 10 பேரை கைது செய்துள்ள விபரத்தை இந்திய கடலோர காவல் படைக்கு இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களின் உறவிர்னகள் கோரிக்க விடுத்துள்ளனர்.