சிறுமி மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற எஸ்.பி., அலுவலகத்தில் பெற்றோர் மனு
விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே தனியார் பள்ளியில் இறந்த குழந்தையின் தந்தை மற்றும் குடும்பத்தார், தங்களுக்கு மிரட்டல் உள்ளதால் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விக்கிரவாண்டி அருகே தனியார் பள்ளியில் இறந்த குழந்தை லியாலட்சுமியின் தந்தை பழனிவேல் நேற்று தனது குடும்பத்தினர், உறவினர்களோடு விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில்,
எனது குழந்தை லியாலட்சுமி படித்த பள்ளியில் 37 கண்காணிப்பு கேமராக்கள் இருந்தன. அதில், 32 கேமராக்களின் வீடியோ பதிவு மட்டும் கைப்பற்றப் பட்டுள்ளது.
இதில், கேமரா 30ல் பதிவான வீடியோவில் எனது குழந்தையை மதியம் 2.14 மணிக்கு ஒரு பெண் கையில் துாக்கி கொண்டு கழிவுநீர் தொட்டி பக்கமாக போவதும், அதே பெண் மீண்டும் அடுத்த சில விநாடிகளில் கழிவுநீர் தொட்டி பக்கமிருந்து மீண்டும் பள்ளிக்கு உள்ளே துாக்கி செல்வதும் பதிவாகி உள்ளது.
இதுபற்றி கூறி நாங்கள் போலீஸ் ஸ்டேஷனில் கூறி அந்த கேமரா பதிவை கேட்டோம். ஆனால், அந்த வீடியோ பதிவை சரியாக காட்டாமல் தவிர்த்து, எங்களை அனுப்ப முயன்றனர்.
அந்த கண்காணிப்பு கேமரா பதிவை தருமாறு நாங்கள் வற்புறுத்தினோம். அதற்கு பின், கழிவுநீர் தொட்டியில் தேடுவது போல நாடகமாடியுள்ளனர். அவர்கள், அங்கிருந்து என் குழந்தையை எடுக்கவில்லை.
இந்த சம்பவத்தில் பள்ளி ஊழியர்கள் அனைவரும் பள்ளி நிர்வாகத்திற்கு உடந்தையாக நாடகமாடி உண்மையை மறைத்துள்ளனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை முழுமையாக எங்களுக்கு வழங்க வேண்டும்.
விக்கிரவாண்டி போலீசார் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசா ரணைக்கு மாற்றி, உண்மையை கண்டறிய வேண்டும். தவறு செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
கண்காணிப்பு கேமரா பதிவுகளை அழிக்க முற்படுகின்றனர். அதை உடனே நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல், மிரட்டல் உள்ளதால், போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.