நெய்வேலியில் கிரேன் கவிழ்ந்து என்.எல்.சி., தொழிலாளி பலி
மந்தாரக்குப்பம்: நெய்வேலி வடக்குவெள்ளூர் பகுதியில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் என்,எல்.சி., தொழிலாளி உயிரிழந்தார்.
நெய்வேலி தாண்டவன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை, 48. என்.எல்.சி.,யில் நிரந்தர தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை 5:30 மணியளவில் மந்தாரக்குப்பம் - நெய்வேலி டவுன்ஷிப் செல்லும் சாலை வடக்குவெள்ளூர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அவ்வழியாக சென்ற எஸ்கார்ட் கிரேன் சாலை வளைவு பகுதியில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது, பைக்கில் சென்ற தங்கதுரை மீது கிரேன் கவிழ்ந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த அவரது உறவினர்கள், என்.எல்.சி.,யில் உரிய இழப்பீடு மற்றும் நிரந்தர வேலை கேட்டு இரவு 8:00 மணி முதல் இரவு 10;00 மணிவரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்.எல்.சி., தலைமை அலுவலக அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
அதில் உரிய இழப்பீடு மற்றும் என்.எல்.சி.,யில் வேலை வழங்கப்படும் என உறுதி அளித்ததை ஏற்று கலைந்து சென்றனர்.