உக்ரைன் போரில் ஒரு லட்சம் வடகொரிய வீரர்கள்; பதிலுக்கு ஏவுகணை தொழில்நுட்பம் தரும் ரஷ்யா
மாஸ்கோ: உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு உதவி செய்ய, தனது நாட்டு ராணுவ வீரர்கள் ஒரு லட்சம் பேரை அனுப்ப, வட கொரியா திட்டமிட்டுள்ளது; இதற்கு பதில் உதவியாக அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா வழங்க முன் வந்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தாலும், இருநாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 'எங்களுக்கு எதிரான போரில் வடகொரிய ராணுவத்தை ரஷ்யா பயன்படுத்துவதாக' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
இதற்கிடையே, வட கொரியா ஏற்கெனவே, ரஷ்யாவிடமிருந்து ராணுவ உபகரணங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு, உதவி செய்ய, ஒரு லட்சம் வீரர்களை அனுப்ப, வட கொரியா திட்டமிட்டுள்ளது. வட கொரியா ஒரு ஹைப்பர் சோனிக் இடைநிலை பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை மேற்கொண்டது.
உக்ரைனுக்கு எதிரான போரில் உதவி செய்வதற்காக அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பத்தை வடகொரியாவுக்கு ரஷ்யா வழங்கியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. அந்தத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணையை தான் வடகொரியா சோதனை செய்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. வடகொரியாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை குறித்து, ஐக்கிய நாடுகள் சபைக்கான துணை அமெரிக்க தூதர் டோரதி காமில் ஷியா கவலை தெரிவித்தார்.