திபெத்தில் தொடரும் துயரம்; ஒரே இரவில் 6 முறை நிலநடுக்கம்; மக்கள் கடும் அவதி
பீஜிங்: திபெத்தில் நேற்று ஒரே இரவில், 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் கடும் அவதி அடைந்தனர். அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஜிகாசே மாகாணத்தின் டிங்கிரி பகுதியில், கடந்த ஜன.,7ம் தேதி காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 ரிக்டர் அளவுக்கு இருந்ததாக, அமெரிக்க புவியியல் சேவை துறை தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால், பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டன. இதில், 126 பேர் உயிரிழந்ததாகவும், 188 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், சீன அரசு கூறியிருந்தது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சில மணி நேரத்துக்கு நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும்படி, சீன அதிபர் உத்தரவிட்டு இருந்தார். இதைத் தவிர, மீட்பு பணிகளில், 1,500 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், திபெத்தில் நேற்று ஒரே இரவில், 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. இரவு 12 மணி முதல் காலை 5 மணிக்குள், 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திபெத்தில் தொடரும் நிலநடுக்கத்தில், மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.