பரபரப்பானது ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம்; வேட்பு மனு தாக்கல் துவக்கம்!

2


ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், இன்று (ஜன.,10) காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் துவங்கியது. பிப்ரவரி, 5ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள், ஈரோடு மாவட்டத்தில் அமலுக்கு வந்தன.


ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், 2021 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட, திருமகன் ஈ.வெ.ரா., வெற்றி பெற்றார். உடல்நலக்குறைவு காரணமாக, 2023ம் ஆண்டு ஜனவரி, 4ல் இறந்தார். அதைத் தொடர்ந்து, அந்த ஆண்டு பிப்., 27ல் இடைத்தேர்தல் நடந்தது. தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, திருமகனின் தந்தையும், தமிழக காங்., முன்னாள் தலைவருமான இளங்கோவன் வெற்றி பெற்றார்.


கடந்த ஆண்டு டிசம்பர், 14ல், அவரும் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதனால், டில்லி சட்டசபை தேர்தலுடன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையும் தேர்தல் கமிஷன் அறிவித்தது. இத்தொகுதியில் இன்று (ஜன.,10) காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் துவங்கியது. முதலில் சுயேச்சையாக போட்டியிட பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 17ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாள். மறுநாள் ஜனவரி 18ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற, ஜனவரி 20ம் தேதி கடைசி நாள்.



பிப்ரவரி மாதம், 5ம் தேதி ஓட்டுப்பதிவும், பிப்ரவரி 8ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடக்க உள்ளது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், இரண்டாவது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ், இம்முறையும் போட்டியிட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.




வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான, ஜனவரி 17ம் தேதி எந்த கட்சிகள் களம் இறங்குகிறது என்பது தெரியவரும். பின்னர் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துவிடும்.

Advertisement