மக்களின் நம்பிக்கை இழந்த தமிழக போலீசார்; கடற்படை வீரருக்கு ஆதரவாக அண்ணாமலை 'வாய்ஸ்'

17


சென்னை: தன்னுடைய பாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மெத்தனமாக செயல்படும் போலீசாரை கண்டித்து வீடியோ வெளியிட்ட இந்திய கடற்படை வீரருக்கு ஆதரவாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குரல் கொடுத்துள்ளார்.


சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய கடற்படை வீரர் இளமாறன், தமிழக போலீசாரைக் கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில்," 2024 ஜன., மாதம் தன்னுடைய பாட்டியை கொடூரமாக வெட்டிக் கொன்றனர். குற்றவாளியை கைது செய்ததாக போலீசார் அன்று கூறினர். ஆனால், யாரையும் அப்போது கைது செய்யவில்லை. இந்த சம்பவம் நடந்து ஓராண்டாகியும், இதுவரையில் ஒருவரை கூட சிவகங்கை போலீசார் கைது செய்யவில்லை.


இதுவே சிவகங்கை டி.எஸ்.பி., எஸ்.பி., வீட்டில் நடந்திருந்தால் ஒரு மணிநேரத்தில் குழு அமைத்து குற்றவாளியை பிடித்திருப்பார்கள். சாதாரண மக்கள் என்றால் இப்படியா? இது தொடர்பாக எஸ்.பி., ஆபிசில் என்னுடை அப்பா 6 முறை புகார் கூறியிருப்பார். ஆனால்,எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்னை ஒரு கிரிமினலாக ஆக்கிவிட வேண்டாம். இந்த வீடியோவை பார்க்கும் முதல்வர் ஸ்டாலின், விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும், என கேட்டுக்கொண்டார்.

அவரது இந்த வீடியோ வைரலான நிலையில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.


இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்; தமிழக போலீசார் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர். இது ஜனநாயகத்திற்கு விடுத்துள்ள அச்சுறுத்தல் ஆகும். இந்திய கடற்படையில் சேர்ந்து நாட்டிற்காக சேவை செய்யும் இந்த அதிகாரியின் பாட்டி கொலை செய்யப்பட்டு ஓராண்டாகி விட்டது. இதுவரையில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றவாளியையும் கைது செய்யவில்லை. விழித்துக் கொள்ளுங்கள் முதல்வரே, இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Advertisement