டார்கெட் முடிக்கணும்; ஒரு கேஸ் வாங்கிக்கங்க; நடந்து போனவர் மீது வழக்கு போட்டது ம.பி., போலீஸ்!

1

போபால்; மத்திய பிரதேச மாநிலத்தில், மாதாந்திர டார்கெட் நிறைவேற்றுவதற்காக, ரோட்டில் நடந்து சென்றவர் மீது, ஹெல்மெட் இல்லாமல் வந்ததாக போலீசார் வழக்கு பதிந்த சம்பவம், அம்பலம் ஆகியுள்ளது.



சினிமாக்களில் ஹெல்மெட் இல்லாமல் சைக்கிளில் செல்வோரை போலீசார் பிடித்து அபராதம் விதிக்கும் காமெடி காட்சிகளை பார்த்திருப்போம், சிரித்திருப்போம். ஆனால் மத்திய பிரதேச மாநிலத்தில் கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக ஹெல்மெட் இல்லாமல் எப்படி நடந்து செல்லலாம் என்று கூறி பாதசாரி ஒருவருக்கு போலீசார் அபராதம் போட்டு கடமையே கண்ணாக இருந்துள்ளனர்.


இதுபற்றிய விவரம் வருமாறு;


பன்னா மாவட்டம், அஜய்கர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுஷில்குமார் சுக்லா. மகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று தமது உறவினர்களை அழைப்பதற்காக அழைப்பிதழ்களுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அனைவரையும் ஆசை தீர அழைத்துவிட்டு தமது வீடுநோக்கி மீண்டும் நடக்க ஆரம்பித்தார். சிறிது தூரம் சென்றிருப்பார், அப்போது அதே வழியில் அலிகார் போலீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்த போலீசார் சிலர் வந்துள்ளனர்.


வந்தவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, நடந்து போய்க் கொண்டு இருந்த சுஷில்குமார் சுக்லாவை அப்படியே அள்ளி தாங்கள் வந்த வாகனத்தில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போய் இருக்கின்றனர். பின்னர் அங்கு வரை அமர வைத்துள்ளனர்.


சிறிதுநேரம் கழித்து ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி, போலீஸ் நிலையத்தில் உள்ள பைக் ஒன்றின் பதிவு எண்ணை எழுதி 300 ரூபாய் அபராதம் போட்டுள்ளனர். டார்க்கெட் முடிக்க வேண்டும் என்று கூறி அபராத சலானையும் அவரிடம் திணித்துள்ளனர்.


இங்கு என்னதான் நடக்கிறது என்று புரியாமல் குழம்பிய சுஷில்குமார் சுக்லா, தமது மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட அழைப்பை மறந்தார். அடுத்து, அவர் நேராக மாவட்ட எஸ்.பி., அலுவலகத்துக்கு சென்று இருக்கிறார்.


தமக்கு நடந்த அனைத்தையும் புகாராக எழுதி அங்கு பதிவு செய்துள்ளார். அவரது புகாரை பெற்றுக் கொண்ட மாவட்ட எஸ்.பி., உடனடியாக ஒரு குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறார்.

Advertisement