டங்ஸ்டன் திட்டம் வராது: போராட்டத்தை கைவிட அண்ணாமலை கோரிக்கை

11


மதுரை : '' மதுரையில் ஒரு போதும் டங்ஸ்டன் திட்டம் வராது. போராட்டத்தை மக்கள் கைவிட வேண்டும்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.


டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஏ.வள்ளாலபட்டி கிராமத்தில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களை தமிழக பா.ஜ., தலைவர் சந்தித்து பேசினார்.


அப்போது அவர் கூறியதாவது: இரண்டு நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்தி நாட்டையே திரும்பி பார்க்க வைத்தீர்கள். பொதுச் சொத்துக்கு ஒரு பைசா சேதம் இன்றி 16 கி.மீ., பேரணி நடந்தது. இங்கு அரசியல் பேச மாட்டேன். தி.மு.க., பா.ஜ., என பேச மாட்டேன். மத்திய, மாநில அரசுகள் என சொல்வேன். பல்லுயிர் தளம், கிராமப்பகுதி, விவசாய நிலம் வேண்டாம் என சொன்னீர்கள். அதனை ஏற்றுக் கொண்டோம். பிறகு, எங்கேயும் டங்ஸ்டன் வேண்டாம் என சொன்னீர்கள். அதனை ஏற்றுக் கொண்டோம்.


மதுரையில் டங்ஸ்டன் திட்டம் ஒரு போதும் வராது. மத்திய அமைச்சரிடம் தொலைபேசி வாயிலாக பேசி உறுதி அளிக்கிறேன். இங்கு சில இயந்திரங்கள் உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு பிறகு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வருவார். வந்து டங்ஸ்டன் திட்டம் வராது எனக்கூறுவார். அதன் பிறகு அந்த இயந்திரங்கள் இங்கிருந்து சென்றுவிடும். இங்கு அனைத்துக் கட்சி தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்ப்பாட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Advertisement