நடிகைக்கு பணம் தந்த வழக்கு: தண்டனையில் இருந்து தப்பினார் டிரம்ப்

8

வாஷிங்டன்: ஆபாச பட நடிகைக்கு பணம் தந்ததை மறைத்த வழக்கில் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப்பை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவரை நிபந்தனை ஏதுமின்றி தண்டனையில் இருந்து விடுவிப்பதாக அறிவித்துள்ளது.


டொனால்டு டிரம்ப் முதன் முறையாக 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அந்த சமயத்தில் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், டிரம்ப் உடனான தன் நெருக்கம் தொடர்பாக தொடர்ந்து பேட்டி அளித்தார். இதனால், தனக்கு தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்று கருதிய டிரம்ப், பேட்டி தராமல் இருப்பதற்காக, பணம் கொடுத்து ஸ்டார்மி வாயை அடைத்தார். இவ்வாறு தரப்பட்ட பணத்துக்கு பொய்க்கணக்கும் எழுதியுள்ளார்.


இது தொடர்பான வழக்கு, நியூயார்க்கின் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில், டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. இதற்கான தண்டனை அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.


தற்போது அதிபர் தேர்தல் முடிந்து டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்; வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளார். இந்த வழக்கில் இன்று(10ம் தேதி) தண்டனையை அறிவிக்க உள்ளதாக நியூயார்க்கின் மன்ஹாட்டன் நீதிபதி ஜுவான் மெர்ச்சன் அறிவித்து இருந்தார்.



இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, டிரம்ப்பை நிபந்தனையின்றி விடுவித்து உத்தரவிட்டு உள்ளார். குற்றச்சாட்டு உறுதியான நிலையில், அவருக்கு சிறை தண்டனையோ, அபராதமோ எதுவும் விதிக்காமல் விடுவித்து, வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்து உள்ளது.
இதன் மூலம், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பிறகு அதிபராக பதவி ஏற்பவர் என்ற நிலை டிரம்புக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement