2 நிறுவனத்தில் தீ விபத்து
குமாரபாளையம்: குமாரபாளையம், விட்டலபுரி பகுதியில் முறுக்கு நுால் மிஷின் வைத்து தொழில் செய்து வருபவர் குமரேசன், 56; நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, 4 பேர் பணியாற்றிக்கொண்டிருந்தனர்.
அப்போது, நுால் கழிவுகள் கொட்டப்பட்டிருந்த இடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு, மளமளவென நிறுவனம் முழுவதும் பரவியது.
இதில், 10,000 ரூபாய் மதிப்புள்ள, 100 நுால் கோன் மூட்டைகள், இரண்டு ட்விஸ்டிங் மிஷின், இரண்டு கோன் வைண்டிங் ஆகியவை தீயில் எரிந்து முற்றிலும் சேதமாகின. மேலும், நிறுவனத்தின் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலர் ஒன்றும் தீயில் எரிந்து சேதமானது.
இந்த நிறுவனத்தின் அருகே, சுப்பிரமணி, 40, என்பவரின் கழிவு பஞ்சு நிறுவனம் உள்ளது. இங்கும் தீப்பற்றியதில் கழிவு பஞ்சுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
குமாரபாளையம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்து குறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.