ஆள் பற்றாக்குறையுள்ள வனத்துறையினர் காட்டுப்பன்றியை சுடுவது கண்துடைப்பு விவசாயிகள் கொதிப்பு
விருதுநகர்:தமிழகத்தில் வனத்துறையில் ஆள் பற்றாக்குறையுள்ள நிலையில் அவர்கள் காட்டுப்பன்றியை சுடுவது கண்துடைப்பான நடவடிக்கையாக அமையும் என விவசாயிகள் ஆதங்கமுற்றனர்.
தமிழகத்தில் காட்டுப்பன்றிகள் தொல்லை விவசாயத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. காட்டுப்பன்றிகள் தொல்லையால் 5 ஆண்டுகளில் விவசாயம் செய்வோர் எண்ணிக்கை குறைந்து சாகுபடி பரப்பும் குறைந்துள்ளது. 2024 வடகிழக்கு பருவமழை காலத்தின் போது தொடர் சேதத்தால் காட்டுப்பன்றியை சுட்டு பிடிக்க மக்கள் பிரதிநிதிகளிடம் கோரினர்.
இந்நிலையில் நேற்றைய சட்டசபை கூட்டத்தில் காட்டுப்பன்றிகள் காப்பு காடுகளில் இருந்து 3 கி.மீ., தொலைவை தாண்டி வந்தால் வனத்துறையினர் சுடலாம் என அத்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். ஆனால் வனத்துறையில் ஆட்கள் பற்றாக்குறையால் இது சாத்தியமில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுப்பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கி விவசாயிகளே சுட்டுப்பிடிக்க அனுமதி கோரி விருதுநகர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் காட்டுப்பன்றிகளின் முகமூடி அணிந்து போராட்டம் நடத்தினர். மேலும் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் வனப்பரப்பை தாண்டியும் கண்மாய்களின் கருவேல மர கூட்டங்களுக்கு மத்தியில் தான் காட்டுப்பன்றிகள் அதிகளவில் வசிக்கின்றன.
வன பரப்பை விட்டு வெளியே தான் காட்டுப்பன்றிகள் அதிகம் திரிகின்றன.
வேட்டை தடுப்பு காவலர்கள், வனச்சரகர்கள் பற்றாக்குறை வனத்துறையில் உள்ளது. மேலும் காட்டுப்பன்றிகளை சுடுவது சாதாரண காரியமல்ல.
இரவில் தான் காட்டுப்பன்றிகள் பயிர்களை சூறையாடுகின்றன. காட்டுப்பன்றிகள் தொல்லை நிலவும் அதே சூழலில் தான் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் யானை தொல்லையும் உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: வனத்துறை அமைச்சரின் அறிவிப்பு கண்துடைப்பாக உள்ளது. ஆள் பற்றாக்குறையால் வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை சுட்டு பிடிப்பது சாத்தியமில்லை. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவதும் சிரமமாக இருக்கும். கேரளாவை போல அவைகளை சுட அனுமதியளிக்க வேண்டும் என்றனர்.