மைதான பணி தாமதம்: பாகிஸ்தான் கிரிக்கெட் மறுப்பு
லாகூர்: மைதான பணியில் தாமதம் இல்லை. திட்டமிட்டபடி சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்படும் என, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்தது.
பாகிஸ்தானில், ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன் வரும் பிப். 19 - மார்ச் 9ல் நடக்கவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
போட்டிகள் பாகிஸ்தானின் லாகூர், கராச்சி, ராவல்பிண்டியில் நடக்கவுள்ளன. இங்குள்ள மைதானங்களில் கட்டுமானம், மறு சீரமைப்பு பணிகள் நடக்கின்றன. இதை விரைவில் முடித்து, வரும் பிப். 12ம் தேதிக்குள் மைதானத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) ஒப்படைக்க வேண்டும். ஆனால் லாகூர், கராச்சியில் கட்டுமானப்பணிகள் மந்தமாக நடக்கின்றன. குறிப்பிட்ட தேதிக்குள் பணிகள் நிறைவடைவது சந்தேகம். கட்டுமானப் பணிகள் முடியாவிட்டால், போட்டிகள் பாகிஸ்தானில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு (யு.ஏ.இ.,) மாற்றப்படலாம் என செய்தி வெளியாகின.
இதனை மறுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மைதான மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ. 300 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளன. மைதான பணிகள் தாமதம் என எங்கள் ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன. இது, ஐ.சி.சி., பி.சி.பி., அரசு, விளம்பரதாரர்கள், ரசிகர்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். இதனால் டிக்கெட் விற்பனையில் பாதிப்பு ஏற்படலாம். மைதான பணிகளை எங்கள் பி.சி.பி., நிர்வாகிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விரைவில் இப்பணிகளை முடித்து மைதானத்தை ஐ.சி.சி.,யிடம் ஒப்படைப்போம். திட்டமிட்டபடி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடத்தப்படும்,'' என்றார்.