ஸ்பெடெக்ஸ் ஒருங்கிணைப்பு: 1.5 கி.மீ., தூரத்தில் விண்கலன்கள்


புதுடில்லி: ஸ்பேடெக்ஸ் ஒருங்கிணைப்பு பணியானது இன்று நடக்கும் என கூறப்பட்ட நிலையில், இரண்டு விண்கலன்களும் 1.5 கி.மீ., தொலைவில் உள்ளதாகவும், நாளை( ஜன.,11) காலை இரண்டுக்கு இடையிலான தொலைவு 500 மீ., ஆக குறைக்கப்படும் என இஸ்ரோ கூறியுள்ளது.


இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சமீபத்தில் ' ஸ்பெடெக்ஸ்' எனப்படும் விண்வெளியில் செயற்கைக்கோள்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, ராக்கெட் ஒன்றை அனுப்பியது. இதில் இடம்பெற்றுள்ள இரண்டு விண்கலன்களை விண்வெளியில் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம். இந்த ஒருங்கிணைப்புக்கு இரண்டு முறை முயற்சிகள் நடந்த நிலையில் சில தொழில்நுட்ப காரணங்களினால், அவை ஒத்திவைக்கப்பட்டன.


இந்நிலையில், இந்த விண்கலன்கள், ஒன்றுக்கு ஒன்று விலகியிருந்தன. இதனால், ஒருங்கிணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது என இஸ்ரோ நேற்று(ஜன.,09) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இரண்டு விண்கலன்களை ஒருங்கிணைப்பு பணியானது இன்று துவங்கும் என அறிவித்து இருந்தது.


இந்நிலையில் இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இரண்டு விண்கலன்களும் 1.5 கி.மீ., தூரத்தில் உள்ளது. இது நாளை காலை 500 மீ., தூரமாக குறைக்க முயற்சி செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement