பராமரிப்பில்லாத பாண்டூர் ஏரி வீணாக வெளியேறும் மழைநீர்
திருவள்ளூர்,:பராமரிப்பில்லாத பாண்டூர் ஏரியில் இருந்து, கடந்த மழை காலத்தில் சேகரமான தண்ணீர் வீணாக மதகு வழியாக வெளியேறுகிறது.
திருவள்ளூர் அடுத்த, பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது பாண்டூர். இந்த கிராமத்தில், 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியில் சேகரமாகும் மழைநீரைக் கொண்டு, இந்த ஊராட்சிக்கு உட்பட்ட, 2,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகின்றன.
பெயருக்கு ஏரி கால்வாய் உயர்த்தினர். ஆனால், ஏரிக்குள் உள்ள ஆக்கிரமிப்பினை அகற்றவில்லை. இதனால், ஒவ்வொரு மழை காலத்திலும் இந்த ஏரியில் முழு அளவு தண்ணீர் நிரம்புவதில்லை. அவ்வாறு நிரம்பும் தண்ணீரையும், ஆக்கிரமிப்பாளர்கள், வெளியேற்றி வருகின்றனர்.
பொதுப்பணித் துறையினர் அலட்சியத்தால், முறையாக பராமரிப்பில்லாத இந்த ஏரியின் மதகு வழியாக, சில நாட்கள் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
திருவள்ளூர் - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையோரம் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் குளமாக தேங்கி உள்ளது. எனவே, கலெக்டர், பாண்டூர் ஏரியினை முறையாக பராமரித்து, தண்ணீரை சேகரித்து விவசாய பயன்பாட்டிற்கு தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.