குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற கோரிக்கை
மப்பேடு, ஜன. 11-
கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சிக்குட்பட்டது அழிஞ்சிவாக்கம். இங்கு, பகுதிவாசிகள் பயன்பாட்டிற்காக, 30 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் ஊராட்சி குளத்தின் அருகே, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பராமரிப்பில்லாததால், மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதையடுத்து, ஓராண்டுக்கு முன், அதே பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும், அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் பகுதி, மாட்டுச் சாணம் கொட்டும் இடமாக மாறியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அபாய நிலையில் உள்ள, பயன்பாடில்லாத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அழிஞ்சிவாக்கம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், ''மப்பேடு ஊராட்சி, அழிஞ்சிவாக்கம் பகுதியில், சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.