'ஏர் இந்தியா'வில் கோளாறு சிங்கப்பூர் பயணியர் அவதி

சென்னை, சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று நள்ளிரவு முன்தினம் 12:45 மணிக்கு, 'ஏர் இந்தியா' விமானம் புறப்பட வேண்டும். விமானத்தில் பயணம் செய்ய 167 பேர் இருந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தாமதமாக, அதிகாலை 2:30 புறப்பட்டது.

விமானம் பறந்து கொண்டு இருந்தபோது, மீண்டும் அந்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமானி, அவசரமாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே 'ரன்வே'யில் தரையிறக்கும் படி அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, அவசரமாக தரையிறங்குவதற்கான, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

பின், அதிகாலை 4:10 மணிக்கு பத்திரமாக விமானம் தரையிறங்கியது. பயணியர் 'லாஞ்ச்' பகுதியில் தங்கவைக்கப்பட்டனர். விமான பொறியாளர்கள் குழுவினர் பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பழுது நீக்க முடியவில்லை. இதையடுத்து, விமான நிறுவனம் மாற்று விமானம் ஏற்பாடு செய்தது. இதையடுத்து, நேற்று காலை 7:30 மணிக்கு, 7 மணி நேரம் தாமதமாக சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றனர்.

'ஏர் இந்தியா' விமானங்களில் அடிக்கடி கோளாறு ஏற்படுகின்றன. சேவை முறையாக இல்லாததால் சிரமமப்படுவதாக சமூக வலைதளங்களில் பயணியர், அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Advertisement