செந்தில் பாலாஜி வழக்கு: நீதிபதி விலகல்
புதுடில்லி: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கின் விசாரணையிலிருந்து விலகுவதாக, நீதிபதி கே.வி.விஸ்வநாதன் அறிவித்ததை அடுத்து, இந்த வழக்கு வேறு அமர்வில் பட்டியலிடப்படும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. உடனடியாக அவர் அமைச்சராக பொறுப்பேற்றார்.
'அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான முறைகேடு வழக்குகள் வேண்டுமென்றே தாமதம் செய்யப்படுகின்றன. அவர், அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்று இருப்பதால் வழக்கில் தாக்கங்கள் ஏற்படும்.
'எனவே, அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும்' எனக் கூறி, பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதேபோல வேறு சிலரும் மனு தாக்கல் செய்தனர்.
ஏற்கனவே இந்த வழக்கு விசாரிக்கப்பட்டபோது, 'இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தை மனுதாரர் நாடலாம்' என்ற யோசனையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்ததோடு, செந்தில் பாலாஜிக்கு எதிராக இடைக்கால உத்தரவுகளை பிறப்பிக்கவும் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.
விசாரணை துவங்கியதும் பேசிய நீதிபதி கே.வி.விஸ்வநாதன், ''நான் வழக்கறிஞராக இருந்தபோது, இந்த வழக்கில் தொடர்புடைய சிலருக்காக ஆஜராகி உள்ளேன். அதனால் இந்த வழக்கை, ஒரு நீதிபதியாக இருந்து விசாரணை நடத்துவது சரியாக இருக்காது. எனவே இந்த வழக்கு, வேறு நீதிபதிகள் அடங்கிய மற்றொரு அமர்வில் பட்டியலிடப்படும்,'' என அறிவித்தார்.
இதையடுத்து, வழக்கின் விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.