கவர்னரை பதவி நீக்க உச்ச நீதிமன்றத்தில் மனு
புதுடில்லி: 'தமிழக கவர்னர் ரவியின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளதால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், 'ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக கவர்னராக ரவி பொறுப்பேற்றதில் இருந்து, மாநில அரசுக்கும், அவருக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்காமல் இருந்த விவகாரத்தில் கூட, கவர்னருக்கு எதிராக மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பட்டமளிப்பு விழா துவங்கி, அரசியல் நிகழ்வுகள் வரை இந்த மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், கவர்னருக்கு எதிராக, வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
தற்போது நடந்து வரும் சட்டசபை நிகழ்வுகளின் துவக்கத்தில், கவர்னர் தன் உரையை படிக்காமலேயே வெளியேறினார். இந்த விவகாரத்தை மையப்படுத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கவர்னரின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளன. கவர்னர் தன் உரையை புறக்கணிப்பதன் வாயிலாக, அந்த பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க அவருக்கு விருப்பமில்லை என்பதை காட்டுகிறது; இது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
கவர்னர் தன் உரையை புறக்கணிப்பதன் வாயிலாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதித்து இருக்கிறார்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதற்கு முன்பாகவே, சபையை விட்டு வெளியேறியது மோசமான செயல்பாடு; மோசமான முன் உதாரணமும்கூட. தமிழக அரசு கொடுக்கும் உரையில் தானாகவே திருத்தங்களையும் அவர் செய்கிறார்; இவையெல்லாம் மரபுகளை மீறிய செயல்பாடுகள்.
கவர்னர், அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையை கூட, ரவி பின்பற்றவில்லை. எனவே, அவரை கவர்னர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.