திறந்த கையோடு கழிப்பறைக்கு பூட்டு சுங்குவார்சத்திரம் வாசிகள் கடும் அவதி
ஸ்ரீபெரும்புதுார்:சுங்குவார்சத்திரத்தில் 19.59 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக திறக்கப்பட்ட பொது கழிப்பறை பூட்டியே கிடப்பதால், பயணியர் மற்றும் பகுதிவாசிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் மருத்துவமனை, உணவகம், வங்கி, பூக்கடை, ஜவுளி கடைகள் என, 300க்கும் மேற்பட்ட சிறு, குறு வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. சுற்றுவட்டாரத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர், பல்வேறு தேவைக்காக தினமும் இங்கு வந்து செல்கின்றனர்.
அதேபோல், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், சுங்குவார்சத்திரம் பகுதியில் வாடகைக்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும், இங்கிருந்து காஞ்சிபுரம், வாலாஜாபாத், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, தாம்பரம், ஆவடி மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு, அரசு பேருந்துகள் வாயிலாக ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
தினமும் 10,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் சுங்குவார்சத்திரம் பஜர் பகுதியில், பொது கழிப்பறை இல்லை. இதனால், திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிக்கும் நிலை இருந்தது. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவியர் மற்றும் பெண்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
எனவே, சுங்குவார்சத்திரம் சந்திப்பில் கழிப்பறை அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, ஒன்றிய பொது நிதியின் கீழ், 19.59 லட்சம் ரூபாயில், சுங்குவார்சத்திரம் சந்திப்பு அருகே, திருமங்கலம் ஊராட்சியில் கட்டப்பட்ட கழிப்பறை, கடந்த மாதம் திறக்கப்பட்டது-. அதன்பின், பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பறையை திறக்காமல், பூட்டியே வைத்துள்ளதால் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, பொது கழிப்பறையை திறக்க நடவடிக்கை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.