பிப்., 1ல் 3ம் ஆண்டு புத்தக திருவிழா துவக்கம்: நாமக்கல்லில் தீவிர ஏற்பாடு



பிப்., 1ல் 3ம் ஆண்டு புத்தக திருவிழா துவக்கம்: நாமக்கல்லில் தீவிர ஏற்பாடு


நாமக்கல்,:'நாமக்கல்லில் பிப்., 1 முதல், 10 வரை, தமிழக அரசு சார்பில், புத்தக திருவிழா நடக்கிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் புத்தக திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், தமிழக அரசு சார்பில், 3ம் ஆண்டு புத்தக திருவிழா, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வரும், பிப்., 1ல் துவங்கி, 10 நாட்கள் நடக்கிறது. இந்த புத்தக திருவிழாவில், பல்வேறு அரங்குகள், முக்கிய பிரமுகர்களின் சொற்பொழிவுகள், பட்டி மன்றம், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், உணவுத்திருவிழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சிறப்பாக நடக்கிறது.
மேலும், மருத்துவ முகாம், உணவு அரங்குகள் ஆகியவை இடம் பெறுகின்றன. இந்த புத்தக திருவிழா சிறப்பாக நடக்க அனைத்து அரசுத்துறை அலுவலர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்புடன் செய்ய வேண்டும். புத்தக திருவிழாவில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் நடக்கிறது. இந்த அறிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, நாமக்கல் மாவட்டத்தில், வரும், 26ல், குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, ஆர்.டி.ஓ.,க்கள் பார்த்தீபன், சுகந்தி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement