வெண்ணந்துார் அருகே பொங்கல் பானை தயாரிப்பு பணி 'சுறுசுறு'
வெண்ணந்துார் அருகே பொங்கல் பானை தயாரிப்பு பணி 'சுறுசுறு'
வெண்ணந்துார்,:வெண்ணந்துார் அருகே, ஓ.சவுதாபுரம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு மண் பானை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வரும், 14-ல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அன்று புதுப்பானையில் பொங்கலிட்டு சூரியனை வழிபடுவது வழக்கம்.
பொங்கலுக்கு தேவையான மண் பானைகள் செய்யும் தொழிலாளர்கள், தற்போது கிராமங்களில் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர்.
அதன்படி, வெண்ணந்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட அளவாய்பட்டி, ஓ.சவுதாபுரம், கட்டனாச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி, தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து, மண்பாண்ட தொழிலாளி குமரேசன், 62, கூறியதாவது: கடந்த, 50 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோம். மண் பானை, சட்டிகள் வாங்கி பயன்படுத்துவது தற்போது குறைந்து வருகிறது.
பொங்கல், தைப்பூசம் போன்ற தினங்களில் புதுப்பானையில் பொங்கல் வைக்கவும், கார்த்திகை தீபத்தன்று புது மண் விளக்கு தீபம் ஏற்றவும், திருமணம், துக்க காரியங்களுக்கு புதிய மண் சட்டி, பானைகளை மக்கள் பயன்
படுத்தி வருகின்றனர். அதற்கு தேவையானவற்றை, குறைந்தளவில் செய்து வருகிறோம்.
தற்போது பொங்கல் பண்டிகையால் விற்பனை சூடு பிடித்துள்ளது. 2 படி பானை, 150 ரூபாய்; 3 படி பானை, 250 ரூபாய்; 4 படி பானை, 300 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். ஆனால், மூலப்பொருளான களிமண்ணை எடுத்து வர எளிதில் அனுமதி கிடைப்பதில்லை. இந்த தொழில் நலிவடைவதற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது. இதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு, மண்பாண்ட தொழிலாளர்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.