நல்லான்செட்டி குளம் இரும்பு தடுப்பு உடைத்து சமூக விரோதிகள் அட்டூழியம்

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டில், கெங்கையம்மன் கோவில் அருகே நல்லான்செட்டி குளம் உள்ளது. வறட்சிக் காலத்திலும் தண்ணீர் வற்றாத இக்குளம், சுற்றுப்பகுதியின் நிலத்தடி நீராதாரமாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், படித்துறைகள் மற்றும் கரைகள் அமைத்து சீரமைக்கப்பட்டது.

அதன் பின் முறையான பராமரிப்பு இல்லாமல், குளத்தினுள் ஏராளமான ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து, குப்பை உள்ளிட்ட கழிவுகளும் குவிந்தன. குளத்தின் கரைப் பகுதிகளும் புதர் மண்டி இருந்தன.

சில மாதங்களுக்கு முன், இந்த குளத்தை கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு செய்து, சீரமைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, பேரூராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ், 20 லட்சம் ரூபாயில், பிரத்யேக இயந்திரம் வாயிலாக குளம் துார் வாரப்பட்டது.

மின் விளக்கு அமைத்தல், குளக்கரை படி, நடைபாதை, குளத்தை சுற்றி இரும்பு கம்பியுடன் சுற்றுச்சுவர் என, குளம் முழுதும் மேம்படுத்தப்பட்டு, தற்போது பணிகள் முடிக்கப்பட்டன.

ஆனால் சமூக விரோதிகள், குளம் சுற்றுச்சுவர் இரும்பு கம்பியை திருட, கம்பியுடன் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரை இரவு நேரத்தில் படிப்படியாக உடைத்து, சாய்த்து வருகின்றனர்.

இது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் பயன்பாட்டிற்காக 20 லட்சம் ரூபாய் செலவில் குளத்தை மேம்படுத்தியுள்ள நிலையில், முழுமையாக இரண்டு மாதம் கூட ஆவதற்குள் சமூக விரோதிகள் இவ்வாறு செய்துள்ளது, கண்டிக்கத்தக்கது.

எனவே, இரும்பு கம்பி சுற்றுச்சுவரை சீரமைத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அத்துடன், இதுபோன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க, போலீசார் இரவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement