பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு
ராசிபுரம், : வைகுண்ட ஏகாதசியையொட்டி, ராசிபுரம் மேட்டுத்
தெருவில் உள்ள பொன் வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று காலை, 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சேஷ வாகனத்தில் முத்தங்கி அலங்காரத்தில் பொன்வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என, பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். 34-ம் ஆண்டாக ஜன கல்யாண் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு 50,000 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
* பள்ளிப்பாளையம் காவிரி கரையோரம் அமைந்துள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில், அதிகாலை, 4:00 மணிக்கு பரமபத வாசல் வழியாக அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் ஆதிகேசவ பெருமாள் சுவாமி சொர்க்கவாசல் வழியாக வந்து அருள்பாலித்தார்.
* வெண்ணந்துார் ஒன்றியத்திற்குட்பட்ட கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவிலில் உள்ள வேணுகோபால பெருமாள் சன்னதியில், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பெருமாளுக்கு இரவு முழுவதும் திருமஞ்சன சேவை நடந்தது.
* மல்லசமுத்திரத்தில் உள்ள, 1,000 ஆண்டு பழமைவாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகு சவுந்தரராஜ பெருமாள் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து, 5:30 மணிக்கு வைகுண்ட சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 'கோவிந்தா, ஸ்ரீரங்கநாதா' என பக்தி கோஷம் முழங்க பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* குமாரபாளையம் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், திருவள்ளுவர் நகர்
சவுந்தரராஜ பெருமாள் கோவில், விட்டலபுரி ராமர் கோவில், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.
* திருச்செங்கோடு அர்த்த
நாரீஸ்வரர் மலைக்கோவிலில், சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக செங்கோட்டுவேலவர், அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாள் சுவாமிகளுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிகேசவ பெருமாளுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், வடக்கு கோபுர வாசல் வழியாக சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.