புதிய குடிநீர் இணைப்பு வழங்கல் மக்களுக்கு கமிஷனர் அழைப்பு




பள்ளிப்பாளையம்: 'பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்' என, கமிஷனர் தயாளன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட, 21 வார்டு பகுதிகளிலும், 'அம்ரூத் 2.0' திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.
பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளுக்கு, புதிய குடிநீர் இணைப்பு வேண்டுவோர், தற்போது செலுத்த வேண்டிய வைப்புத்தொகை, 5,000 ரூபாயை, 10 தவணைகளாக (500 ரூபாயாக) பிரித்து குடிநீர் கட்டணத்துடன் சேர்த்து செலுத்துமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும், நகராட்சி முழுவதும் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால், சாலை அமைப்பதற்கு முன்பாக புதிய குடிநீர் இணைப்பு பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இந்த வாய்ப்பை தவறவிடும்பட்சத்தில் வைப்பு தொகையான, 5,000 ரூபாயை ஒரே தவணையாக செலுத்த நேரிடும். எனவே, பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement