நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கைநடக்கும்போது அரசாணை நகல் எரிப்பு தமிழ்நாடு சாலை பணியாளர்கள் முடிவு

சிவகங்கை:''மாநில நெடுஞ்சாலை ஆணைய அரசாணையை ரத்து செய்யக்கோரி அத்துறை மானிய கோரிக்கை நாள் அன்று மாநில அளவில் நகல் எரிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, சிவகங்கையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறையின் கீழ் பணிபுரியும் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் தமிழகத்திலுள்ள 52 'டோல்கேட்களில்' ஆண்டுக்கு சுங்க வரியாக ரூ. 3,817 கோடி வரை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் மாநில நெடுஞ்சாலை ஆணையமும் 'டோல்கேட்' அமைத்து வசூலித்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர்.

எனவே ஆணையத்திற்கான அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் ஜன.,20 முதல் பிப்.,வரை மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம், மார்ச் 26 ல் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்துள்ளனர்.

நேற்று மாவட்ட தலைநகரங்களிலுள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் தலையில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

இறுதி கட்டமாக 5 ஆயிரம் சாலை பணியாளர்களை வேலை இழக்க செய்யும் மாநில நெடுஞ்சாலை ஆணைய அரசாணை நகலை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை நாளன்று மாநில அளவில் உள்ள 10 மண்டல கண்காணிப்பு பொறியாளர் அலுவலகங்கள் முன் அரசாணை நகல் எரிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

Advertisement