பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் நேற்று திறக்கப்பட்டதையடுத்து, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, காலை 4:00 மணிக்கு தனுர் பூஜைக்கு பின், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவர், காலை 5:00 மணிக்கு பிரதான நுழைவு வாயில் திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். பின், வெள்ளிக்கிழமை மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்துடன் அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு மாடவீதி புறப்பாடு நடந்தது. சத்தியமூர்த்தி தெருவில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. பூங்கா நகர் சிவ - விஷ்ணு கோவிலில், அதிகாலை 4:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
கும்மிடியில் கருட சேவை
கும்மிடிப்பூண்டி அலர்மேல்மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று சிறப்பு உற்சவம் நடந்தது. கோ பூஜையுடன் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது. பெருமாள், விசேஷ பஜனையுடன், கருட வாகனத்தில் வீதியுலா சென்று அருள்பாலித்தார்.
பரணம்பேடு ருக்மணி சமேத பாண்டுரங்கன் கோவிலில், கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா சென்று கிராம மக்களுக்கு அருள்பாலித்தார்.
ஊத்துக்கோட்டை
ஊத்துக்கோட்டை அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏதாதசி தினத்தையொட்டி நேற்று விடியற்காலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்தார்.
தொம்பரம்பேடு சீனிவாச பெருமாள் கோவில், தாராட்சி கலியுக வெங்கடேச பெருமாள் கோவில், பெருமுடிவாக்கம் கோதண்டராம சுவாமி கோவில் உள்ளிட்ட பெரும்பாலான பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக நடந்தது.
திருத்தணி
திருத்தணி கோட்ட ஆறுமுக சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள விஜயராகவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
நெமிலி வைகுண்ட பெருமாள் கோவில் ஏகாதசியையொட்டி அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
திருத்தணி அடுத்த, தரணிவராகபுரம் சீனிவாச பெருமாள் கோவில், ராமகிருஷ்ணாபுரம் வேணுகோபால சுவாமி கோவில், ம.பொ.சி.சாலை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், அகூர் பெருமாள் கோவில், கொல்லகுப்பம் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டன.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவிலில் யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில், சோளிங்கர் நகரில் அமைந்துள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி, நேற்று அதிகாலை, பக்தோசித பெருமாள், கருட வாகனத்தில் கோபுர வாசலில் எழுந்தருளினார்.
பள்ளிப்பட்டு
பள்ளிப்பட்டு பெருமாள் கோவில், ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனுார் திரவுபதியம்மன் கோவிலில், அனந்த சயன கோலத்தில் பெருமாள் அருள்பாலித்தார்.
-- நமது நிருபர் குழு -