ஏழைகளுக்கு வரிய பார்த்துப் போடுங்க வருமான வரி அலுவலகத்தில் நடிகர் வடிவேலு ஜாலி
மதுரை: 'ஏழை, பாழைங்களுக்கு வரியை கொஞ்சம் பார்த்துப் போடுங்க'' என்று மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர் வடிவேலு பேசினார்.
மதுரை வருமான வரித்துறை ரிக்கரியேஷன் கிளப் சார்பில் பொங்கல் விழா நடந்தது. தலைமை கமிஷனர் சஞ்சய்ராய் தலைமை வகித்தார்.
முதன்மை கமிஷனர் வசந்தன், கூடுதல் கமிஷனர் சந்திரசேகரன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் வடிவேலு நிருபர்களிடம் கூறியதாவது: பொங்கலை மக்களோடு மக்களாக சேர்ந்து கொண்டாட ஆசைப்பட்டேன். அதனை இங்கே கொண்டாடி விட்டேன். ஜல்லிக்கட்டு போட்டி பார்க்க சென்றால், மாடுபிடிப்பதை பார்க்கலாம். ஆனால் நான் மாடு பிடிக்கிற ஆள் கிடையாது. என்னை அதில் தள்ளிட்டு போயிடாதீங்க. நான் மாட்டைப் பார்த்து ஓடிடுவேன்.
மாடு குத்தி துாக்கிடும்
மாடு எங்க வருதுன்னு யாருக்கு தெரியும். இப்போதெல்லாம் ரெம்ப கண்ட்ரோலா விடுறாங்க. முன்பெல்லாம் மாடு விடும்போது பேசிக்கிட்டு இருப்போம். எங்க பின்னால வந்து குத்தி துாக்கிட்டு போயிரும். ஒரு கண்ட்ரோல் இல்லாம இருந்துச்சு. இப்ப கண்ட்ரோல்ல போய்கிட்டு இருக்கு. ஜல்லிக்கட்டு ரொம்ப சிறப்பா, பெரிய லெவல்ல போய்கிட்டு இருக்கு.
அடுத்து 'கேங்கர்ஸ்' சுந்தர்.சி படத்திலும், பகத் பாசிலோடு சேர்ந்து 'மாரிசன்' என 2 படங்கள் ரெடியா இருக்குது. அடுத்து பிரபுதேவாவும், நானும் சேர்ந்து ஒரு படம் பண்ணுகிறோம்.
23ஆம் புலிகேசி மாதிரியான படங்களை எப்போது எதிர்பார்க்கலாம் என்று கேட்கிறீர்கள். இப்போதெல்லாம் தேர்வு செய்து படங்களில் நடிக்கிறேன். மாமன்னன் ஒரு மாதிரியான கதாபாத்திரம். கேங்கர்ஸ் முழு நீள நகைச்சுவை படம். குழந்தை குட்டிகளோடு சேர்ந்து ரசிக்கும் அளவுக்கு பிரமாதமாக வந்துள்ளது.
நான் படங்களில் மூன்று பரிமாணங்களில் நடித்து வந்தேன். ராக் காமெடி விட்டுவிட்டேன். டிராக் காமெடி பண்ணினேன். ஹீரோக்கள் காம்பினேஷன் பண்ணினேன்.
தனியாக ஹீரோ என மூன்று படம் கைவசம் வைத்திருக்கிறேன். தற்போது டிராக் காமெடி இல்லை. அதனால் பல கதையோடு காமெடி வருகிறது என்றார்.
பெயரை கேட்டு நழுவல்
வருமான வரித்துறையின் மேடையில் பேசும்போது ஒரு கோரிக்கை வைத்தீர்களே என்றதற்கு, ''ஏழை, பாழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் என்றேன். அது ஜாலியான மேட்டர் தானே.
வடிவேல் சொன்னதுனால எதுவும் தப்பில்லையே'' என்றார்.
விஜய் அரசியலுக்கு போய் விட்டார். அவர் இடத்தை நீங்கள் நிரப்புவீர்களா. அஜித் கார் விபத்து போன்ற கேள்விகளுக்கு, 'வேற ஏதாவது பேசுவோமா' என்று நழுவினார்.