பயன்பாடில்லாத சமுதாய கூடத்தை இடித்து அகற்ற வேண்டுகோள்
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் வேலஞ்சேரி காலனியில், 30 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் சமுதாய கூடம் புதிதாக கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டிருந்தது. இதில், திருமணம், வளைகாப்பு போன்ற பல்வேறு சுபநிகழ்ச்சிகளை அப்பகுதியினர் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ஊராட்சி நிர்வாகம் சமுதாய கூடத்தை முறையாக பராமரிக்காததால் இடிந்து விழும் நிலையில் இருந்தது. அதையடுத்து, அதே பகுதியில் வேறு இடத்தில் புதிதாக சமுதாய கூடம் கட்டி, மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
ஆனால், பழுதடைந்த பயன்பாட்டில்லாத சமுதாய கட்டடத்தை இடிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இந்த கட்டடம் அருகே அங்கன்வாடி மையம், இளைஞர்கள் வாலிபால் ஆடும் விளையாட்டு மைதானம் உள்ளது.
பழுதடைந்த சமுதாய கூடம் கட்டடம் அருகே குழந்தைகள் அடிக்கடி செல்கின்றனர்.
அதனால், பெற்றோர் தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பி வைக்க அச்சப்படுகின்றனர்.
எனவே, பயன்பாட்டில் இல்லாத சமுதாய கூடத்தை இடித்து அகற்ற வேண்டும் என, அப்பகுதியினர், மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இது குறித்து, திருத்தணி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பயன்பாட்டில் இல்லாத சமுதாய கூடம் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் அந்த கட்டடம் இடித்து அகற்றப்படும்' என்றார்.