கழிவுநீர் வாகனங்கள் ஆய்வை முறைப்படுத்துவது அவசியம்; சுத்திகரிப்பு நிலையங்களில் கொட்டப்படுகிறதா
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கழிவுநீர் வாகனங்கள் குறித்த ஆய்வை முறைப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகி உள்ளது. மாதந்தோறும் ஆய்வு நடத்தி சுத்திகரிப்பு நிலையங்களில் கொட்டப்படுவதை உறுதி செய்ய நகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் செப்டிக் டேங்க் கழிவுநீர் எடுக்கும் வாகனங்கள் வீடுகளில் எடுத்த கழிவுநீரை நகராட்சிகளின் சுத்திகரிப்பு நிலையங்களில் தான் கொட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. இதற்காக சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாத நகராட்சிகள், மாநகரட்சியிலும் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. விருதுநகரில் பாதாளசாக்கடை திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளதால் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் செப்டிக் டேங்கில் கழிவுநீர் வாகனங்கள் வீடுகளில் சேகரிக்கும் கழிவுகளை நீர்நிலைகளில், காலி நிலங்களில் கொட்டுகின்றனர். இதனால் நீரும், நிலத்தடி நீரும் நாசமாகிறது.
இத்தகைய சூழலில் சுத்திகரிப்பு நிலையங்களில் கொட்டப்படுவதை உறுதி செய்ய அவர்களது எடுக்கும், வெளியேற்றும் பணிகளை கண்காணிப்பது அவசியமாகிறது. மாதந்தோறும் எத்தனை முறை கழிவுநீரை எடுத்து, வெளியேற்றம் செய்துள்ளனர் என்பதை பதிவேடுகளில் பராமரிப்பதை ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு எடுத்த ஒவ்வொரு முறையும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்றுள்ளதா என்பதை மாதம் தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.
இதை நகராட்சி நிர்வாகங்கள் ஆய்வு செய்யாமல் உள்ளன. ஆண்டுக்கொரு முறை பெயருக்கு ஆய்வு செய்கின்றனர். எப்போதாவது மாவட்ட நிர்வாகமோ, மாசு கட்டுப்பாட்டு வாரியமோ நடவடிக்கை எடுக்க எடுக்கின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் கழிவுநீர் வாகனங்களை விதியை மீறி நீர்நிலைகள், நிலங்களில் கொட்டுவதை கண்டு கொள்வதில்லை.
மேலும் சுத்திகரிப்பு நிலையங்களில் கொட்டுவதை உறுதி செய்வதும் கிடையாது. எனவே மாவட்ட நிர்வாகம் இதை கண்காணிக்க குழு அமைத்து முறைப்படி கழிவுநீர் வெளியேற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.