ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருக்கனுார் : காட்டேரிக்குப்பம் போலீசார் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களிடையே ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

புதுச்சேரியில் நாளை (12ம் தேதி) முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் மேற்பார்வையில் காட்டேரிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போலீஸ் சார்பில் ஹெல்மெட் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமை தாங்கி, மாணவர்களிடையே இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பேசினார். நாளை (12ம் தேதி) முதல் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கடைப்பிடிப்பதுடன், பெற்றோர்கள் இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து செல்ல அறிவுறுத்தும்படி மாணவர்களை கேட்டுக் கொண்டார்.

இதில், காட்டேரிக்குப்பம் போலீசார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து, 'தலைக்கவசம் அணிவோம், உயிரைக் காப்போம்' என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பேனர் போலீசார் சார்பில், அனைத்து பள்ளி வளாகங்களிலும் வைக்கப்பட்டது.

Advertisement