'கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்' கவர்னர் கைலாஷ்நாதன் அறிவுரை

புதுச்சேரி : 'கட்டாயம் ெஹல்மெட் அணிய வேண்டும் என்பதை சட்டங்கள், விதிமுறைகளால் மட்டுமே மாற்றிவிட முடியாது. நாம் ஒவ்வொருவரும் கடமையையும் பொறுப்யையும் உணர்ந்து செயல்பட வேண்டும்' என கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.

புதுச்சேரி, கடற்கரை சாலை, காந்தி சிலை அருகில், போலீஸ்துறை சார்பில், தலைக் கவசம் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் சாலை விபத்துகளில் மரணம் இல்லா புதுச்சேரி இயக்கத் தொடக்க விழா நடந்தது.

நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போக்குவரத்து போலீசில் சிறப்பாக செயல்பட்டவர்கள் மற்றும் சாலை போக்குவரத்து தொடர்பாக நடத்தப்பட்ட கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

மேலும் போலீஸ், ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் பங்கேற்ற ெஹல்மெட் விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., ஷாலினி சிங், டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள் பிரவின்குமார் திரிபாதி, கலைவாணன் மற்றும் போலீஸ்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் கவர்னர் பேசியதாவது:

சாலை விபத்துகளில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது பதைக்க வைக்கிறது. உடலில் அதிக காயங்கள் இல்லாமல் ெஹல்மெட் அணியாத ஒரே காரணத்தால் தலையில் அடிபட்டு உயிரிழப்பு ஏற்படுவது மிகுந்த வருத்தத்தை தருகிறது.

தேசிய அளவில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலங்களில் புதுச்சேரியும் ஒன்று. இந்த விபத்துகளில், 40 சதவீத உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதால் நடக்கிறது.

இளைஞர்கள் ெஹல்மெட் இன்றி, இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்தை உணராமல் இருப்பதை ஏற்க முடியாது. அவர்கள் தான் நாட்டின் சொத்து.

போலீஸ்துறையின் சட்டங்கள், விதிமுறைகள் மட்டுமே இதை மாற்றிவிட முடியாது. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கடமையையும் பொறுப்யையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

நாம் பார்க்கும், 99 சதவீத வாகன ஓட்டிகளும் ெஹல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்டுகின்றனர். புதுச்சேரி மக்களும், இங்கு வந்து செல்லும் மக்களும் இரு சக்கர வாகனங்களை ஓட்டும் போது கட்டாயம் ெஹல்மெட் அணிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம்



புதுச்சேரியில் நாளை 12ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் என அறிவித்த போலீஸ், அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தது. இறுதியாக, 1,500 போலீசார் பங்கேற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு பைக் ஊர்வலம் கடற்கரையில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற கவர்னர் கைலாஷ்நாதன், ஊர்வலத்தை துவக்கி வைத்து அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் தெரிவித்து, ஹெல்மெட் கட்டாய உத்தரவு நாளை அமலுக்கு வருகிறது, என்பதை உறுதிப்படுத்தினார்.

Advertisement