38 மாவட்டங்களிலும் சிறப்பு திட்ட செயலாக்கப் பிரிவுகள் பிப்., முதல் செயல்பட உத்தரவு

மதுரை : தமிழகத்தில் முக்கிய திட்டங்களை கண்காணிக்க மாவட்ட அளவிலான கண் காணிப்புக் குழு (டி.எம்.யூ.,) அமைக்கவும், அதற்காக 38 கலெக்டர் அலுவலகங்களிலும் சிறப்பு திட்டச் செயலாக்க பிரிவு துவங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
.

மாநிலத்தில் சிறப்பு செயலாக்கத் திட்டத்துறை சார்பில் மாவட்டம் வாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க டி.எம்.யூ., அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.


இதன்படி அதற்கான பிரிவுகள் 38 மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் ஜன.31க்குள் தனியாக அலுவலகம் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இக்குழுவில் புள்ளியியல் ஆய்வாளர், பி.இ., கணினி அறிவியல், டேட்டா சயின்ஸ் கல்வித் தகுதி கொண்ட ஒரு அலுவலர் அவுட்சோர்ஸில் ஜன., 31க்குள் நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறப்புத் திட்டச் செயலாக்க அதிகாரி ஒருவர் கூறியதாவது: கலெக்டர் அலுவலகத்தில் துவங்கப்படும் இப்பிரிவின் சேர்மன் கலெக்டராக இருப்பார்.

கன்வீனராக புள்ளியல் துணை இயக்குநரும், உறுப்பினர்களாக சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள், அனைத்து துறை அதிகாரிகள் இடம் பெறுவர்.


புள்ளியியல் ஆய்வாளருக்கு கீழ் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் கணினி தெரிந்த அலுவலரை நேர்காணல் நடத்தி அவுட்சோர்ஸிங் மூலம் கலெக்டர் நியமிக்க உள்ளார்.


இவருக்கான சம்பளம், அலுவலக செலவுக்கு ஓராண்டுக்கான நிதி, கணக்கு எண் ஆகியன ஒதுக்கப்பட்டுள்ளது. இக்குழு அனைத்து துறைகளின் திட்டச் செயல்பாடுகளை கண்காணித்து, சிறப்பு செயலாக்க திட்டத் துறைக்கு அறிக்கை தாக்கல் செய்யும். பிப்.,முதல் வாரம் முதல் இவ்வலுவலகம் செயல்பட துவங்கும் என்றார்.

Advertisement