இந்திரா நகர் அரசு பள்ளியில் பசுமை வளாக திட்டம் துவக்கம்
புதுச்சேரி : இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில், சுற்றுச்சூழல் அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பில் பசுமை வளாக திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, பொதுமக்கள் ஈடுப்பாட்டுடன், அடுத்த 5 ஆண்டுகளில் பசுமை பரப்பை இரட்டிப்பாக்கும் செயல்பாட்டுடன், பசுமை புதுச்சேரி இயக்கத்தை துவக்கி உள்ளது.
இதில், ஒரு வீடு ஒரு மரம், நகர்புற தோட்டம், கிராமப்புற காடு வளர்ப்பு, புனித தோப்புகளை மீட்டெடுத்தல், பசுமை வளாகம், பசுமை தொழில் வளாகம் மற்றும் பசுமை அலுவலக வளாகம் என்ற 7 கூறுகைளை கொண்டுள்ளது.
நடப்பு பருவ மழை காலத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை சுற்றுச்சூழல் துறை செய்து வருகிறது.
பசுமை வளாகம் என்ற திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 55 பள்ளிகளில், 1500 மரக்கன்றுகளும், காரைக்காலில் 72 பள்ளி வளாகங்களில், 1,500 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் துவக்க நிகழ்ச்சி, இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
அரசு கொறடா ஆறுமுகம் தலைமை தாங்கி, வேம்பு, சரக்கொன்றை, மகிழம், மயில் கொன்றை, நெல்லி மரக்கன்றுகளை நட்டு பணியை துவக்கி வைத்தார். பள்ளியின் துணை முதல்வர் சந்திரன் முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் வர வேற்றார். ஒருங்கிணைப்பாளர் லட்சுமிநாராயணன், மாசு கட்டுப்பாட்டு குழும தொழில்நுட்ப உதவியாளர் சதிஷ்குமார், திட்ட அலுவலர் பன்னீர்செல்வம், அபிராமி உட்பட பலர் பங்கேற்றனர்.