பிரச்னையும் தீர்வும்
சிவகாசி: சிவகாசி நகரில் ரோட்டோரத்தில் நிறுத்தப்படும் டூவீலர்கள், கனரக வாகனங்கள், முக்கிய ரோடுகளில் ஆக்கிரமிப்புகள், செயல்படாத டிராபிக் சிக்னல்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் இருப்பதால் மூலப் பொருட்களை கொண்டு வருவதற்கும் உற்பத்தி பொருட்களைக் கொண்டு செல்வதற்காக தினமும் 200க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.
ஆனால் இந்த வாகனங்களை தனியாக நிறுத்துவதற்கு என லாரி முனையம் இல்லை. இதனால் நகருக்கு சரக்குகள் ஏற்றி வருகின்ற கனரக வாகனங்கள் திருத்தங்கல் ரோடு, சிறுகுளம் கண்மாய்க்கரை ரோடு, சாத்தூர் ரோடு பைபாஸ் ரோடு, வேலாயுதாரா ஸ்டார் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்தப் படுகின்றது.
இதனால் போக்குவரத்து பாதிப்பதோடு விபத்திற்கும் வழி ஏற்படுகிறது.
நகரில் கீழ ரத வீதி, புது ரோடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பஜார்களில் ஆக்கிரமிப்பினால் ரோடு மிகவும் குறுகலாகிவிட்டது.
இந்த ரோடுகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. தவிர நகரில் கட்டப்பட்டுள்ள பெரும்பான்மையான வணிக வளாகங்கள், நிறுவனங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு என இடம் ஒதுக்கவில்லை. இதனால் பல்வேறு தேவைகளுக்கும் டூவீலரில் வருபவர்கள் தங்களது டூவீலர்களை வேறு வழியே இன்றி ரோட்டிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
ஆக்கிரமிப்பினால் ரோடு சுருங்கிய நிலையில் டூ வீலர்களையும் ரோட்டிலேயே நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காரனேசன் விலக்கு, பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப், நாரணாபுரம் ரோடு விலக்கு, சாத்துார் ரோடு விலக்கு, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டிராபிக் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் எந்த இடத்திலும் தற்போது டிராபிக் சிக்னல்கள் செயல்படவில்லை.
இதனால் எப்போதுமே இந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது.
தவிர வேலாயுத ரஸ்தா ரோடு விலக்கு உள்ளிட்ட போக்குவரத்து நிறைந்த பல பகுதிகளில் இதுவரையில் டிராபிக் சிக்னல்களும் அமைக்கவில்லை.
குமார், ஆட்டோ உரிமையாளர்: நகரில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள், நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள் போன்றவைகளில் பெரும்பான்மையானற்றில் வாகனங்கள் நிறுத்துவதற்கு என இடம் ஒதுக்கவில்லை.
இதனால் இங்கு வாகனங்கள் போக்குவரத்து நிறைந்த ரோட்டிலேயே நிறுத்தப்படுகின்றன.
எனவே வருங்காலங்களிலாவது புதிதாக கட்டப்படும் நிறுவனங்கள் வணிக வளாகங்களில் பார்க்கிங் வசதி உள்ளதா என ஆய்வு செய்து கட்டடங்களை கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
மகேந்திரன், ஆட்டோ டிரைவர்: நகரில் உள்ள அனைத்து டிராபிக் சிக்னல்களும் செயல்படவில்லை. போக்குவரத்து நிறைந்த ஒரு சில ஜங்சன்களில் டிராபிக் சிக்னல்களை அமைக்கவில்லை.
இதனால் இப்பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்தும் ஏற்படுகிறது.
மேலும் ரோட்டோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களாலும் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது.