செங்கரும்பு கொள்முதல் விலையில் 'வெட்டு' விழுந்தால் விவசாயிக்கு நஷ்டம்
கம்பம்: பொங்கல் செங்கரும்பு கொள்முதலில் அரசு நிர்ணயித்த விலையில் வெட்டு விழுந்தால் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் புலம்புகின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு வழங்க விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் சின்னமனூர், பெரிய குளம், தேனி ஆகிய 3 ஊர்களில் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். சின்னமனூரில் 2 லட்சம் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது கரும்பு கொள்முதலை அதிகாரிகள் நிறைவு செய்துள்ளனர்.
கரும்பு கொள்முதல் குறித்து விவசாயிகள் கூறுகையில் ஒரு கரும்பின் விலை ரூ.35 என அரசு நிர்ணயம் செய்துள்ளது.10 எண்ணம் கொண்ட ஒரு கட்டு ரூ.350.
இதில் போக்குவரத்து கட்டணம் ரூ.80, வெட்டு கூலி ஒரு கட்டுக்கு ரூ.40 என மொத்தம் ரூ.120 செலவு போக ரூ.230 கிடைக்கும். இப்போது ஒரு கட்டுக்கு ரூ.20 வெட்டு விழும் என தகவல் கூறுகின்றனர்.
இதில் மேலும் பிடித்தம் செய்தால் பெரும் நஷ்டம் ஏற்படும். தனியாரிடம் விற்றால் ஒரு கட்டுக்கு ரூ.230 முதல் ரூ.250 வரை விலை கிடைக்கும். கொள்முதலுக்கு வந்தவர்கள் ஒவ்வொரு பிரிவினருக்கும் இனாம் கரும்பு கணிசமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இது விவசாயிகளுக்கு எப்படி கட்டுபடியாகும் என்று புலம்புகின்றனர்.