சர்க்கரை நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுக்கும் புதிய திட்டத்தால் டாக்டர்கள் புலம்பல்

கம்பம்: ஒவ்வொரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினமும் 15 சர்க்கரை நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுக்கும் திட்டத்தில் 100 நாட்களுக்குள் முடிக்க வலியுறுத்துவதால் டாக்டர்கள் புலம்புகின்றனர்.

தமிழகத்திலும் குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் காச நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதால் மத்திய அரசு சில சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் 60 வயதுக்கு மேற்பட்டோர், சர்க்கரை நோயாளிகள், முடக்குவாதம், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கவும், அதனை 100 நாட்களுக்குள் முடிக்கவும் மருத்துவ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது: கம்பம் வட்டாரத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோயாளிகள் என 44 ஆயிரம் பேர்களும், சின்னமனூரில் 34 ஆயிரம் பேர்களும், உத்தமபாளையத்தில் 38 ஆயிரம் பேர்களும் உள்ளனர். டிஜிட்டல் அல்லாத எக்ஸ்ரே கருவியில் ஒரு நாளைக்கு 20 பேருக்கு எக்ஸ்ரே எடுப்பது சிரமம். டிஜிட்டல் எக்ஸ்ரே என்றால் கூடுதலாக எடுக்கலாம். 100 நாட்களில் பல ஆயிரம் பேருக்கு எவ்வாறு எக்ஸ்ரே எடுத்து முடிக்க முடியும். பரிசோதனை செய்யப்பட்டவருக்கு காச நோய் உள்ளதா இல்லையா என்பதை 'நிக்சய்' போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என புலம்புகின்றனர்.

வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பல அரசு மருத்துவமனைகளிலும் டிஜிட்டல் எக்ஸ்ரே இல்லை. நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மாவட்டத்தில் 2 மட்டும் உள்ளது. அந்த வாகனங்களில் தான் எடுக்க வேண்டும். டிஜிட்டல் அல்லாத எக்ஸ்ரே இயந்திரத்தில் ஒரு நாளைக்கு 30 பேருக்கு எடுக்கலாம். ஆனால் டிஜிட்டல் என்றால் எத்தனை பேர்களுக்கு வேண்டுமானாலும் எடுக்கலாம். இப்போது இந்த திட்டத்தில் எக்ஸ்ரே எடுப்பதும், 100 நாட்களுக்குள் இலக்கை எட்டுவதும் சிரமமானதது தான் என்றார்.

Advertisement